

இலங்கையின் பொருளாதாரத்தை ஒரு சுழற்சிப் பொருளாதாரமாக நிலைமாற்றுவதில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவுகள் (SMEs) ஒரு முக்கிய வகிபாகத்தைக் கொண்டுள்ளன. இதனைக் கருத்திற்கொண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) நிதியுதவியில் முன்னெடுக்கப்படும் PLASTICS திட்டம், பிளாஸ்டிக் மீள்சுழற்சி பெறுமதிச் சங்கிலியில் உள்ள 152 SME களுக்கு பேண்தகுநிலை மற்றும் இலாபமீட்டும் திறன் என்பவற்றை அடையத் தேவையான முக்கிய திறன்களை வழங்குகின்றது.
தொழிற்துறை சேவைகள் பணிமனையின் (ISB) ஒத்துழைப்புடன் இலங்கையின் மேல் மாகாணத்தில் வியாபாரத் திட்டம் தயார்படுத்தலுக்கான 5 நாள் முழுமையான பயிற்சி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த அமர்வுகள் கம்பஹா, கொழும்பு, மற்றும் களுத்துறை மாவட்டங்களில் நடத்தப்பட்டது. இப்பயிற்சித் தொடர் மூலமாக 113 விபரமான வியாபாரத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் எட்டுத் திட்டங்கள் தயாரிப்பில் உள்ளன. மேலும் 15-20 SME களை இலக்கு வைத்து 2024 டிசம்பர் மாதம் இன்னொரு மேலதிக பயிற்சி அமர்வு நடத்தப்படவுள்ளது.
வெற்றிக்கான ஒரு அடித்தளத்தை உருவாக்குதல்
இந்தப் பயிற்சி அமர்வுகள் வியாபாரத் திட்டமிடலின் அடிப்படை கருதுகோள்களுக்கு மேலதிகமாக, நீண்ட கால மூலோபாயங்களுடன் பேண்தகுநிலை மற்றும் புத்தாக்கம் என்பவற்றின் கொள்கைகளை இணைப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டது. வியாபாரத் திட்டங்களில் பின்வருவன உள்வாங்கபடுகின்றன:
- தொலைநோக்கு (Mission), பணிப்பாதை (Vision), மற்றும் நிறுவன வளர்ச்சிக்கான குறிக்கோள்கள்.
- செயல்பாட்டை ஒருமுகப்படுத்துவதற்கான சந்தைப்படுத்தல், உற்பத்தி மற்றும் மனித வளத் திட்டங்கள்.
- தகவலறிந்த தீர்மானம் மேற்கொள்ளலுக்காக நிதியியல் எதிர்வுகூறல் மற்றும் விகிதப் பகுப்பாய்வு.
பங்கேற்பாளர்களின் வியாபாரங்களை சுழற்சி பொருளாதாரத்துடன் ஒன்றிணைக்கும் வகையில் வள வினைத்திறன், தூய்மையான உற்பத்தி, பசுமை முதலீடுகள், சமூக மற்றும் பால்நிலை உள்வாங்கல் போன்ற முக்கிய கூறுகளை உள்ளடக்க பங்கேற்பாளர்கள் பயிற்றப்பட்டனர்.
திட்டங்களை முன்னேற்றமாக மாற்றியமைத்தல்
இந்தப் பயிற்சியின் நிகழ்ச்சித்திட்டத்தின் தாக்கம் பல SME களுக்கு நிலைமாற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது:
- கட்டமைப்பு மேம்பாடுகள்: இயக்கத்தை செம்மையாக்கவும் உற்பத்தித் திறனை ஊக்குவிக்கவும் பங்கேற்பாளர்கள் நடைமுறை அறிவைப் பெற்றுக்கொண்டனர்:
- சிறந்த நிதியியல் உள்நோக்குகள்: இலாப நட்ட பகுப்பாய்வுகளை தற்போது SME கள் புரிந்துகொள்கின்றன, அதன் மூலமாக அவற்றால் புத்திசாதுரியமான முதலீடுகளை மேற்கொள்வது இயலுமாகியுள்ளது.
- நிதியிடலுக்கான அணுகல்: வாண்மைத்துவமாக உருவாக்கப்பட்ட தமது வியாபாரத் திட்டங்களை அளிக்கை செய்ததன் மூலமாக, பல வியாபாரங்களால் ஏற்கனவே வங்கிக் கடன்களைப் பெற முடிந்துள்ளது.
பின்வருவன உள்ளடங்கலாக PLASTICS திட்டத்தினால் வழங்கப்படும் ஏனைய வாய்ப்புகளை SME கள் அணுகுவதற்கான வழியையும் இவ்வியாபாரத் திட்டங்கள் வழங்குகின்றன:
- பசுமை நிதியிடல் மற்றும் RECP (வள வினைத்திறன் மற்றும் தூய உற்பத்தி) மதிப்பீடுகள்:
- QEMS (துரித சூழல் முகாமைத்துவ முறைமை) சான்றழிப்பு மற்றும் ISO 14001 இணக்கப்பாடு.
- விற்பனையாளர் – கொள்வனவாளர் மன்றங்களில் பங்கேற்றல், பெறுமதியான சந்தைத் தொடர்புகளை வளர்த்தல்.
ஒரு ஒத்துழைப்பான முயற்சி
இந்த பயிற்சி அமர்வுகளின் வெற்றி ISB, ACTED, மற்றும் PLASTICS திட்டம் என்பவற்றின் ஒத்துழைப்பு அணுகுமுறைக்கு சான்று பகர்வதாக உள்ளது. அனுபவம் மிக்க பயிற்றுனர்கள் மற்றும் வியாபார விருத்தி நிபுணர்களின் தலைமையில் இந்த அமர்வுகளை நடத்தியதுடன் ACTED பணியாளர்கள் உரிய ஆதரவுகளை வழங்கியதுடன் சிறந்த ஒழுங்கமைப்பு மற்றும் ஏற்பாட்டியல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
பேண்தகுநிலையை நோக்கிய ஒரு வழி
பல SME களுக்கு இந்த முன்னெடுப்பு ஒரு திருப்புமுனையாக அமைந்திருந்தது. பேண்தகு நடைமுறைகளைக் கைக்கொள்ளல், செயற்பாடுகளை மேம்படுத்தல், மற்றும் ஒரு போட்டித்தன்மை மிக்க சந்தையில் செழிப்படைதல் போன்றவற்றுக்கு அவர்களை வலுப்படுத்தியது. தமது மூலோபாயங்களுடன் சுழற்சிப் பொருளாதாரக் கொள்கைகளை இணைப்பதன் மூலம், இந்த வியாபாரங்கள் சூழல் தாக்கத்தைக் குறைப்பது மாத்திரமன்றி தமது தாங்குதிறன் மற்றும் இலாபமீட்டும் திறனையும் வலுப்படுத்தியுள்ளனர்.
பேண்தகுநிலை மிக்க SME துறையின் விருத்தியில் அர்ப்பணிப்பு உள்ளதாக PLASTICS திட்டம் அமைந்துள்ளது, ஒரு நேரத்தில் ஒரு வியாபாரத்திட்டம் என இது முன்னோக்கி நகர்கின்றது.
