
இலங்கையின் மேற்கு மாகாணத்தில் பிளாஸ்டிக் மீள்சுழற்சி பெறுமதிச் சங்கிலியில் ஈடுபாடுகளைக் கொண்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவுகளுக்கு (SMEs) வியாபாரத் திட்டம் தயாரிப்பு தொடர்பான முழுமையான 7 பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை தொழிற்துறை சேவைகள் பணிமனை (ISB) வெற்றிகரமாக நிறைவு செய்தது. இந்த நிகழ்ச்சித்திட்டங்கள் ஒவ்வொன்றும் 5-நாட்கள் கொண்டதாக அமைந்திருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) நிதியுதவியில் முன்னெடுக்கப்படும் PLASTICS திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சித்திட்டங்கள், நவம்பர் 2024 இன் இறுதியில் 113 தனிப்பட்ட வியாபாரத் திட்டங்கள் உருவாக்கப்படுவதற்கு வழிவகுத்தன, மேலும் எட்டு வியாபாரத் திட்டங்களின் தயார்படுத்தல் தற்போது நடைபெறுகிறது. டிசம்பர் 2024 இல் 15-20 SME களுக்கு இன்னொரு பயிற்சி அமர்வு நடத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
திட்டப் பயனாளிகள் வலுவான 5-வருட வியாபாரத் திட்டங்களை உருவாக்க அவர்களுக்கு உதவுவதே இந்த முன்னெடுப்பின் முக்கிய இலக்காக அமைந்துள்ளது. வளங்களை வினைத்திறனுடன் பயன்படுத்தல், தூய்மையான உற்பத்தி முறைகளைக் கைக்கொள்ளல், பேண்தகுநிலையான நுகர்வை மேம்படுத்தல், பசுமை முதலீடுகளை ஊக்குவித்தல், அத்துடன் சமூக உள்வாங்கல் மற்றும் பால்நிலை சமத்துவம் என்பவற்றை உறுதி செய்தல் போன்ற முக்கிய விடயங்களில் இந்த வியாபாரத் திட்டங்கள் கவனம் செலுத்துகின்றன. இந்த செம்மையாக்கப்பட்ட அணுகுமுறையை பின்பற்றுவதன் மூலம், பிளாஸ்டிக்குகள் எவ்வாறு சேகரிக்கப்படுகின்றன, மீள்சுழற்சி செய்யப்படுகின்றன, உற்பத்தி செய்யப்படுகின்றன மற்றும் சந்தைப்படுத்தப்படுகின்றன என்பன போன்ற அம்சங்களை மேம்படுத்துவதன் மூலம் சுழற்சிப் பொருளாதாரத்துக்கு ஆதரவளிப்பதை இந்த முன்னெடுப்பு குறியிலக்காகக் கொண்டுள்ளது.


பயிற்சியின் அடிப்படைப் பகுதிகள்
ஒரு வியாபாரத் திட்டத்தின் பின்வரும் முக்கிய கூறுகளை விருத்தி செய்ய பங்கேற்பாளர்கள் கற்றுக்கொண்டனர்:
- தொலைநோக்கு, பணிப்பாதை (Mission), மற்றும் குறிக்கோள்கள்.
- சந்தைப்படுத்தல், உற்பத்தி மற்றும் மனித வளத் திட்டங்கள்.
- விகிதப் பகுப்பாய்வு உட்பட நிதியியல் திட்டமிடல்.
இந்த முன்னெடுப்பு வியாபாரங்களுக்கு ஆதரவளிப்பது மாத்திரமன்றி பசுமை நிதிக்கான அணுகல், RECP (வள வினைத்திறன் மற்றும் தூய்மையான உற்பத்தி) மதிப்பீடுகள், QEMS (துரித சூழல் முகாமைத்துவ முறைமை) சான்றழிப்பு, ISO 14001 இணக்கம், மற்றும் விற்பனையாள-கொள்வனவாளர் மன்றங்களில் பங்கேற்பு போன்ற ஏனைய திட்ட செயற்பாடுகளுக்கான அடிப்படை ஆவணங்களையும் வழங்குகின்றது.
பயிற்சியின் தாக்கம்
SME களுக்கு தமது வியாபாரங்களில் கட்டமைப்பு மேம்பாடுகளை மேற்கொள்ளத் தேவையான நடைமுறை அறிவை வழங்கியதன் மூலம் இந்தப் பயிற்சி அவற்றுக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. பங்கேற்பாளர்கள் இலாப நட்ட பகுப்பாய்வு பற்றிய தெளிவான புரிதலையும் பெற்றனர், இது மேலும் தகவலறிந்த முடிவுகளை எடுக்க அவர்களுக்கு உதவியது. பயிற்சியின் விளைவாக, பல SMEகள் தாம் உருவாக்கிய வியாபாரத் திட்டங்களைப் பயன்படுத்தி வங்கிக் கடன்களையும் பொருள் வடிவ மானிய உதவிகளையும் வெற்றிகரமாகப் பெற்றுள்ளன.
பங்கேற்பாளர்கள் எளிதில் அணுகக்கூடிய விதத்தில் கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பயிற்சி அமர்வுகள் நடத்தப்பட்டன. ISB இன் நிபுணர் பயிற்சியாளர்கள் மற்றும் வணிக மேம்பாட்டு வல்லுநர்கள் தலைமையில் பயிற்சி அமர்வுகள் இடம்பெற்றன, மேலும் ஒழுங்கமைப்பு மற்றும் ஏற்பாட்டியல் விடயங்களை ACTED பணியாளர்கள் முகாமை செய்தனர்.
இந்த முன்னெடுப்பு பல SME களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையைக் அமைந்தது, அவை சுழற்சிப் பொருளாதார கொள்கைகளுக்கு ஏற்புடையதாக தமது செயற்பாடுகளை பேண்தகுநிலை மிக்கதாக மற்றும் இலாபகரமானதாக முன்னேற்றப் பாதையில் நகர்வதற்கு பயிற்சி அமர்வுகள் உதவின.
